search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக் குற்றச்சாட்டு"

    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேராவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. #ThisaraPerera
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அவருக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அவருக்கு முன்பாக சன்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா 20 ஓவர் போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர். திசரா பெரேரா, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 74 பந்துகளில் 13 சிக்சருடன் 140 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்யா வெளியிட்ட ஒரு பதிவில், ‘நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரியை திசரா பெரேரா சந்தித்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



    அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது, அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

    இது போன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம். கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

    தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் 29 வயதான திசரா பெரேரா குறிப்பிட்டுள்ளார். #ThisaraPerera

    ×